புதுவை காரைக்காலைச் சேர்ந்த இரட்டையர் விசாகன், ஹரிணி . இவர்கள் இருவரும் 3 வயதில் இருந்தே கராத்தேயில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு வெற்றி விருதுகள் குவித்து வரும் இருவரும் தற்போது குறைந்த வயதில், கராத்தேயில் 2முறை பிளாக் பெல்ட் வென்று, உலக சாதனை புத்தகம் 2022 பதிப்பில் இடம் பிடித்துள்ளனர்.
அதிசய குழந்தைகள்
லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சாதனை புத்தக நிறுவனம் அளித்திருக்கும் சான்றிதழில், ” இந்தியாவில் , காரைக்காலைச் சேர்ந்த மாஸ்டர் ஸ்ரீ விசாகன். கே மற்றும் பேபி ஸ்ரீ ஹரிணி. கே ஆகிய இரண்டு அதிசய குழந்தைகளும், மிகவும் இளம் வயதில் கராத்தே எனும் தற்காப்பு கலையில் இரண்டு முறை பிளாக் பெல்ட் வென்ற சாதனையாளர்கள் என அங்கீகரிக்கப்படுகிறது. இந்த சாதனையை 6 வயது மற்றும் 9 வயதில் இரண்டு முறை நிகழ்த்தியிருக்கிறார்கள்” என குறிப்பிட்டிருக்கிறது.
சாத்னை இரட்டையர் குறித்து அவர்களின் பெற்றோர் காளிமுத்து (எ) முருகானந்தம் -கே.பிரியா ஆகியோர் கூறுகையில், ” 3 வயதிலேயே காரைக்கால் வி. ஆர் .எஸ். மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியில் தற்காப்பு கலையை கற்க அனுமதித்தோம். கராத்தே கற்கத் தொடங்கிய 3 ஆண்டுகளில், 6 வயதில் முதல் டிகிரி பிளாக் பெல்ட்டை வென்று, இந்தியாவிலேயே முதன் முதலாக இளம் வயதில் பிளாக்பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையை படைத்தனர். இதனைத் தொடர்ந்து மலேசியாவில் நடைபெற்ற 4 வது கே .எல். மேயர்ஸ் கப் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.
ஜூஜுட்சோ, சிலம்பம்
இளம் சாதனையாளர் விருதினையும், கௌரவ டாக்டர் பட்டத்தினையும், தமிழக பண்பாட்டுக் கழகம் வழங்கிய ‘ராஜ கலைஞர்’ என்ற விருதினையும் வென்றனர். கராத்தே என்ற தற்காப்புக்கலையுடன் நிஞ்சா டோ, டேக்வாண்டோ, கிக் பாக்சிங், மூ தாய், ஜூஜுட்சோ, சிலம்பம் ஆகிய கலைகளுடன் யோகாவையும் கற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சாதனையாளர்களாக
பள்ளியில் நடைபெறும் நாடகம், நடனம், பேச்சுப்போட்டி களில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளனர். நாங்கள் அவர்களது விருப்பங்களை அறிந்து கொண்டு ஆதரவு அளித்து வருகிறோம். அவர்கள் தான் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனையாளர்களாக தொடர்கிறார்கள்” என்றனர்.
எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகி, நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பது விசாகனின் இலக்கு. இதய நோய் நிபுணராகி, ஏழை எளியவர்களுக்கு சேவை செய்வது ஹரிணியின் லட்சியமாகும்.